திருமலை : திருப்பதி ஏழுமலையானை மலைப்பாதை வழியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் புதிய திட்டத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மலைப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சுவாமியை விரைவாக தரிசிக்கும் வகையில் திவ்ய தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் மலைப்பாதையில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. வாரவிடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கும் வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி, நாராயணகிரி தோட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பக்தர்களுக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு போன்ற சம்பவங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அலிபிரி மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு 14 ஆயிரம் டிக்கெட்டுகளும், வாரி மெட்டு மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகளும் என ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த காலங்களில் 2 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள், தற்போது கூட்டத்துக்கு ஏற்ப 1 மணி நேரம் முதல் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12 மணிக்குள் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும் தீர்ந்துவிடுவதால், அதன்பின்னர் வரும் பக்தர்கள் மலையடிவாரத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த கூட்டத்தை சரிசெய்வதில் அதிகாரிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. தேவஸ்தானம் நாள்தோறும் புதிய புதிய திட்டங்கள் கொண்டுவருவதால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக