இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் மலையின் உச்சியிலே அமர்ந்துள்ள முருக பெருமானை தரிசிக்க போன அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு ....
குழந்தைக்கு முதல் மொட்டை போடலாமென்று சென்ற வாரம் பழனிக்கு சென்று வந்தோம். பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் கோவிலுக்கு அழைத்து செல்ல ஆட்டோக்கள் நிறைய இருந்தாலும் நாங்கள் குதிரை வண்டியை தேர்வு செய்தோம். குதிரை வண்டியில் அமர்ந்து குதிரையின் காலடி ஓசை டக் டக் என தாள லயத்துடன் சப்திக்க வண்டி ஒரு பக்கம் குலுங்க சுற்றிலும் தென்பட்ட காட்சிகளை ரசித்து கொண்டே சென்றது ஒரு இனிமையான அனுபவம் .
கோவிலுக்கு மேலே ஏறுவதற்கு முன் மொட்டை போடும் இடம் ஆவினன்குடி கோவிலுக்கு அருகிலேயே இருப்பதால் அங்கு சென்று டோக்கன் பெற்று கொண்டு குழந்தைகளுக்கு மொட்டை போடும் இடம் உள்ளே சென்றோம். சுற்றிலும் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டிருக்க 1-2 வயது குழந்தைகள் அழுகையுடன் மொட்டையடித்து கொண்டிருந்தனர்.எங்கள் பாப்பாவை மொட்டையடிப்பவர் முன் உட்கார வைக்க ஒரே அழுகை, குழந்தைக்கு காயம் பட்டு விடுமோ என்ற பயத்துடனே குழந்தையை இறுக்கி பிடித்து உட்கார வைத்து ஒரு வழியாக மொட்டையடித்து முடித்தோம்.
மொட்டையடித்தவுடன் அருகிலேயே உள்ள குளிக்குமிடத்தில் வெந்நீர் தேவை என டோக்கன் வாங்கி குளிக்க வைத்து சந்தனம் பூசி கீழே உள்ள ஆவினன்குடி குழந்தை வேலப்பரை வணங்கி விட்டு அருகிலேயே உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றோம் .
இந்த உணவகத்தில் மத்திய உணவாக சாப்பாடு , தக்காளி சாதம் மட்டுமே கிடைக்கிறது . மற்றபடி தோசை, பரோட்டா, சப்பாத்தி என வேறெந்த உணவு வகையும் இந்த நேரத்தில் கிடைப்பதில்லை .
உணவருந்தி முடித்து விட்டு கீழே உள்ள விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏற ஆரம்பிதோம். படி வழியாக ஏறுவதை விட யானை பாதை வழி கொஞ்சம் சுலபமாக உள்ளது. மேலே ஏற ஏற ஒவ்வொரு வளைவிலும் நிறைய கடைகள் உள்ளது .மேலே நின்றபடி சுற்றி பார்க்க பழனி நகர் முழுதாக தெரிகிறது.வீடுகள் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தார் போல் அழகாக காட்சி தருகிறது.மறு பக்கம் திரும்பி பார்த்தால் தூரத்தே மலையும் அதன் முன்னே பசுமையான வயல்களுமாக சுற்றிலும் அழகான காட்சிகள்.
மலை உச்சியை நாங்கள் அடைந்த போது கூட்டம் குறைந்த நேரமாதலால் பழனி முருகனை சற்று நேரத்திலேயே ராஜ அலங்காரத்தில் தரிசிக்க முடிந்தது.சுவாமி தரிசனம் முடித்து சிறிது நேரம் வானரங்களின் சேட்டைகளை ரசித்தபடி அமர்ந்திருந்து விட்டு கீழே இறங்கி பஞ்சாமிர்தம் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக