திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 23ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 23ம்தேதி முதல் நேற்று வரை சிறப்பாக நடைபெற்றது. நேற்றுகாலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. மாலையில் பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டதையடுத்து பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இதையடுத்து செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் அன்னமையா பவனில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 23ம்தேதி முதல் 30ம்தேதி வரை 8 நாட்களில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 705 பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் மூலவரை தரிசனம் செய்தனர். தினந்தோறும் 7.5 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு 26 லட்சத்து 55 ஆயிரத்து 80 லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த 8 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.18 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரம். 3 லட்சத்து 6 ஆயிரத்து 271 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் 2 ஆயிரம் பேரும், சாரண, சாரணியர்கள் ஆயிரம் பேரும், 5400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுவாமி வீதி உலாவின் போதும் திருமலை மற்றும் திருப்பதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 10.82 சதவீதம் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கை ரூ.20 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரம். இந்தாண்டு ரூ.18 கோடியே 70 லட்சத்து 29 ஆயிரம். அதன்படி உண்டியல் காணிக்கையும் குறைந்தது. ரூ.300 மற்றும் திவ்ய தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு செய்து குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோல் இலவச தரிசன நேர ஒதுக்கீடு செய்து தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து எந்தெந்த இடத்தில் இதற்கான கவுன்டர்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சோதனை முறையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் குளறுபடிகள் சரி செய்யப்பட்டு 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து முழு நேர ஒதுக்கீடு மூலம் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக