மழைக்காலத்தில் நம்மை தொந்தரவு செய்யும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று சேற்றுப்புண். சாலைகளில் தேங்கிக் கிடக்கும் சேறு சகதி, கழிவு நீர் கலந்த மழைநீரை மிதித்து நடப்போருக்கும், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும் எளிதில் இந்தப் பாதிப்புத் தொற்றிகொள்ளும்.
சேற்றுப்புண், சாதாரணமாகத் தொடங்கும். படிப்படியாக தொந்தரவு அதிகமாகிவிடும். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும். காலணிகள், பயன்படுத்த முடியாது. நடப்பதற்கே சிரரமாகிவிடும்.
சேறு, நீண்ட நாள் தேங்கிய தண்ணீர், கழிவு நீர் ஆகியவற்றிலிருந்து உருவாகும் நுண்கிருமிகளின் தொற்றினால் கால்களில் உண்டாகும் புண்களையே சேற்றுப்புண் என்கிறோம். மண், சேறு சகதியில் உள்ள பாக்டீரியா, நுண்கிருமிகள் கால் விரல்களின் இடுக்குகளில் தங்கிவிடும். வியர்வை காரணமாக வேகமாக வளரத்தொடங்கும். கால்களை சரியாக சுத்தப்படுத்தாமல் விட்டால், சேற்றுப்புண் வரும். இந்த புண்கள் பெரும்பாலும் பாதங்களிலும், விரல்களுக்கு நடுவிலும் வந்து பாடாய்ப் படுத்தி எடுக்கும்.
"மிகுந்த கவனத்துடன் கால்களைப் பராமரிப்பதன் மூலம் சேற்றுப்புண்ணை தவிர்க்கலாம்" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்
ஆர்.பாலமுருகன்.
சேற்றுப்புண்ணில் இருந்து கால்களை எப்படி காத்துக்கொள்வது? சேற்றுப்புண்ணால் அவதிப்படுபவர்களுக்கு என்ன தீர்வு? விரிவாக விளக்குகிறார் அவர்.
“மழை காலத்தில் வந்து நம்மை அவதிக்கு உள்ளாக்கும் சேற்றுப்புண் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவ நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு சமஸ்கிருதத்தில் 'அல்ச' என்று பெயர். 'இது சகதியில் பாதங்களை வைப்பதால் ஏற்படுகிறது என்றும் இது பாதங்களில் இரண்டு விரல்களுக்கு நடுவே அரிப்பையும் புண்ணையும் ஏற்படுத்தும்' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.
எப்படி வருகிறது?
தொடர் மழையால் தேங்கி நிற்கும் நுண்கிருமிகள் தாக்குதல் இந்த சேற்றுப்புண் தொந்தரவுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் எப்போது ஈரப்பதமான இடங்களில் நின்று கொண்டு வேலை செய்பவர்களை சேற்றுப்புண் அதிகம் பாதிக்கும். மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்பது, பாதங்களில் அழுக்கு சேர்வது போன்ற காரணங்களால் இது தீவிரமாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன?
சேற்றுப்புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஈரப்பதம். துணி துவைப்பது போன்ற வேலைகளின்போது, அதிக நேரம் தண்ணீரில் நிற்க வேண்டியிருக்கும். அதுபோன்ற வேலைகளை முடித்துவிட்டு, மென்மையான துணியைக்கொண்டு கால்விரல்களையும் இடுக்குகளையும் நன்றாகத் துடைக்க வேண்டும். அதேபோல, மழைநீரில் நனைந்த கால்களை வீட்டிற்கு வந்ததும் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
காலணிகளையும் நன்றாக கழுவிய பின் சுத்தம் செய்து உலர்ந்தபின்பு மீண்டும் பயன்படுத்த வேண்டாம். வெந்நீரில் சிறிதளவு உப்பு போட்டோ, எழுமிச்சம்பழச் சாறு கலந்தோ கால்களை கழுவலாம்.
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையுடன் நீர் சேர்த்து, அதை கொதிக்க வைத்த பின் அந்த நீரைக்கொண்டும் பாதங்களை கழுவலாம்.
வீட்டில் அரிசியை அலசும் தண்ணீரை சேகரித்து, அதை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு பாதங்களை கழுவிய பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட வேண்டும்.
தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, குளிப்பதற்கு முன்பு, காலில் தடவிக் குளித்தால், சேற்றுப்புண் வராது.
சேற்றுப்புண் பாதித்தவர்கள் செய்ய வேண்டியவை என்ன?
மேற்கண்ட வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி பாதங்களை நன்றாக கழுவி பின்பு ஒரு கைப்பிடி வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துப் பூச வேண்டும். அதேபோல, அறுகம்புல்லுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூசலாம்.
மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம். மஞ்சளை மட்டும் நீர்விட்டு அரைத்துப் பூசலாம். அம்மான் பச்சரிசி இலையை அரைத்தும் பூசலாம். வேப்பெண்ணெயைக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் பூசலாம். வேப்பிலையும் எள்ளையும் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவலாம்.
இது தவிர ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் 'சிந்துராதி லேபம்', 'மகாதிக்தக லேபம்' போன்ற மருத்துகளை காலை மாலை இரு வேளை பூசிக் கொள்ளலாம் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சூடு செய்து பூசலாம்.
குழந்தைகளுக்கு காலில் சேற்றுப்புண் வந்தால் சிறிதளவு வெண்ணெயைத் தடவலாம். இதனால் எரிச்சல் இல்லாமல் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு சேற்றுப்புண் வந்தால் பெரும்பாலும் விரைவில் ஆறாது. எனவே மருத்துவரைப் பார்ப்பது நல்லது. பொதுவாக, சேற்றுப்புண் வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது.." என்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக