திருப்பதி: திருமலையில், பக்தர்கள் தங்கும் வாடகை அறைகளுக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேர சலுகை
திருமலையில், பல வகை கட்டணங்களில் வாடகைக்கு அறைகள் கிடைக்கும். இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடந்த காலங்களில், அறையை காலி செய்யும் போது, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதற்கு பிறகு தாமதமானால் மட்டுமே கூடுதலாக தொகை வசூலிக்கப்படும். ஆனால், கடந்த வாரம் முதல் இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு நிமிடம் தாமதம் ஆனால் கூட, ஒரு நாள் வாடகையை வசூலித்து விடுகின்றனர். இது பக்தர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறைக்கு முன் பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை கண்டுபிடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகி விடுகிறது. சில நேரங்களில் அறை கிடைத்தாலும், அதை சுத்தம் செய்து தர அரை மணி நேரத்திற்கு மேல் எடுத்து கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு மணி நேர சலுகையை ரத்து செய்வது சரியல்ல என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:அறையை காலி செய்யும் பக்தர்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட சலுகையால், ஏற்கனவே அறைக்கு பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. திருமலையில் தற்போது பிரமோற்சவம் நடந்து வருகிறது. தற்போது அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான், புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய முறைபடி சரியான நேரத்தில் அறை ஒதுக்கப்படும். எனவே, பக்தர்கள் சிரமம் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக