தட்சனுக்கு
ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். திருமணத்தின் போதே சந்திரா! இருபத்தேழு பெண்களையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இல்லையேல் நடப்பதே வேறு... என எச்சரித்து அனுப்பினான் ஆயினும் காலச் சூழலில் சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான். அதனாலேயே தமிழில் திங்களும், ரோகிணியும் சேர்ந்திருந்தாற் போல பழமொழி கூட நிலவுகின்றது.மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டார். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்தறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின. சந்திரனும் அபயம் தேடி அங்கும் இங்குமாக தேர்வர்கள் முதல் இந்திரன், பிரம்மா, விஷ்ணு என அனைவரிடமும் தஞ்சம் கேட்டான். காப்பாற்றச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர்.
இதற்கிடையில்கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். காப்பாற்ச் சொல்லித் துடித்தான். தட்சனின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அவர்கள் எல்லோரும் மறுத்து விட்டனர். இதற்கிடையில் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து மூன்றாம் பிறைக்கு வந்ததது. நேராகக் கைலாசம் சென்று பரமேஸவரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவற்றை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பௌர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.
சந்திரன் பதினாறு கலைகளுடன் பூரணமாக மிகுந்த ஒளியுடன் காட்சி தருகின்றான். அத்தகைய ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம். மேலும் ஆகாயத்திலிருந்து தோன்றிய காற்றின் உதவியுடன் நெருப்பை மூட்டி மண்ணிலிருந்து விளைந்த அரிசியினை நீரில் வேகவைத்து சாதமாக அன்னமாக உருவாக்கி அதனை அபிஷேகம் செய்வதால்8 பஞ்சபூதங்களையும் தன்வசத்தில் இயக்கும் ஈசனுக்குப் பஞ்ச பூதங்களின் உதவியுடன் செய்த அன்னத்தால் அபிஷேகம் செய்து மகிழ்கின்றோம்.
கலியுகத்தில் உணவுதான் உயிராக விளங்குகின்றது. இறைவன் நமக்களித்த உணவான அன்னத்தை நாம் இந்த ஐப்பசி பௌர்ணமி புனித நன்னாளில் இறைவனுக்கே அபிஷேகம் செய்து நன்றி செலுத்துகின்றோம். கல்லினுள் தேரைக்கும், கருப்பையில் இருக்கும் ஜீவனுக்கும் உணவளிப்பவர் ஈசன். எனவே அன்னமே உயிர்நாடி, அன்னமே பிரம்ம, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக விளங்குவதாக வேதங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதியே அமுது படைக்கும் அன்னபூரணியாக விளங்குகின்றாள். அவளும் ஈசனும் ஒன்றாகையால் ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்து வணங்குகின்றோம்.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்திக்கக் கூடாது என்றும், ப்ராணோவா அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ, அது இல்லாமல் போனால் உயிர் போகின்றது என்றும், அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறைவடிவம், மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவில் இருக்கின்றார் என்றும், அன்னமே தானாக இருக்கின்றேன் என்றும் வேதநாயகனான ஈசன் கூறுவதாக வேதங்களும், உபநிடதங்களும் தெரிவிக்கின்றன.
அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு 70 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் செய்யப் பெறுகின்றது. அவற்றில் சுத்த அன்னமும் ஒன்றாகும். தினசரி காலை 11.00 மணியளவில் தில்லை நடராஜப் பெருமான் திருக்கோயிலில் ஸ்படிகலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பது சிறப்பான செய்தியாகும். எனவே தான் அப்பர் பெருமானும்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
எனப்பாடி உருகினார்.
ஈசனை நடராஜப் பெருமானை தரிசிப்பதால் உயிர்க்கு அமுதமாகிய வீட்டின்பமும், உடலின் வளமைக்கு உரிய உணவும் கிடைக்கின்றது. மேலும் பொன்னுலக வாழ்வாகிய தேவர் வாழ்வும் சித்திக்கின்றது. இப்பூவுலகில் கண்டு இன்புறுவதற்கு உரிய திருக்காட்சியினைக் கண்டவர்களுக்கு யாவும் வசமாகும். யாவும் கைவரப் பெறும் இத்தகைய எம்பெருமானை தரிசித்தவர்களுக்கு மீண்டும் பிறவிவாய்க்குமோ? வாய்க்காது என்கிறார் அப்பர் பெருமான்.
ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று அசுபதி நட்சத்திரத்திற்கு உரிய அன்னத்தால் ஈசனுக்கு அபிஷேகம் செய்வதால் உலகத்திற்கே நன்மை கிடைக்கும் என சிவாகமஞ்கள் தெரிவிக்கின்றன. அபிஷேகம் செய்யப்பெறும் ஒவ்வொரு சாதப்பருக்கையும் சிவலிங்கம் ஆகும். எனவே அன்னாபிஷேகத்தன்று ஈசனை தரிசிப்பதால் கோடிலிங்க தரிசனம் செய்த பலன் கிடைக்கின்றது எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள்.
வானியல் அறிவியல் சாஸ்திரப்படியும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதாகவும், அப்போது சந்திரன் மிக ஒளியுடன் காட்சி தருவதாகவும் தெரிவிக்கின்றது. எனவே இப்புனித நாட்களில் சிவாலயங்களில் சாயரட்சை எனப்பெறும் மாலை நேரப்பூஜை வேளையில் அன்னாபிஷேக தரிசனம் நிகழ்கின்றது. அன்னத்தை வடித்து ஆறவைத்து சிவலிங்கத்தின் மேலே அழகாக அலங்காரம் செய்வார்கள் மேலும் புடலங்காய் போன்ற காய்கறிகளை அவித்து மேலே சார்த்துவார்கள். உப்பில்லாமல் வடை செய்து அணிவிப்பது வழக்கம். சிறப்பான அன்னாபிஷேக அலங்கார ஈசனுக்கு சந்திரன் உதயமானவுடன் சிறப்பான பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு எட்டு மணியளவில் அன்னாபிஷேக அலங்காரம் பிரிக்கப்பெற்று, சிவலிங்கத் திருமேனிமேல் சார்த்தப்பெற்ற அன்னத்தையும், காய்கறிகளையும், வடைமாலையையும் அர்ச்சகர் தனது தலைமேல் ஒரு கூடையில் சுமந்து கொண்டு தீவட்டி, மேளதாளத்துடன், பக்தர்கள் சிவபுராணம் பாடிய வண்ணம் அல்லது அரஹர, சிவசிவ என நாமம் சொல்லிய வண்ணம் அருகில் உள்ள ஓடும் நீர் நிலைகளிலோ அல்லது ஆலயத் திருக்குளத்திலோ சென்று அதனை நீரில் கரைத்து தீபாராதனை செய்வார்கள். இதன் மூலம் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் கூட இறைவன் படியளப்பதாக ஐதீகம் சிவலிங்கத் திருமேனியைச் சுற்றியுள்ள அன்னத்தை தயிர் சாதமாக்கிப் பிரசாதமாக வழங்குவார்கள் குறிப்பாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னத்தை உண்பதன் மலம் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை உண்மையும் கூட.
அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது எனவும் வேதங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி கொண்ட கங்கை கொண்ட சோழபுரம், தஞ்சைப்பெரிய கோயில் பெரு ஆவுடையார் ஆகியோருக்கு
100 மூட்டைகள் சாதம் வடித்து அன்னாபிஷேகம் நடைபெறுவது உலகப்பிரசித்தமாகும்.
ஐப்பசி மாதப் பௌர்ணமி புனித நன்னாளில் (03.11.2017) சிவாலயங்களுக்கு சென்று அன்னாபிஷேக தரிசனம் செய்வோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக