Like us on Facebook

வியாழன், 2 நவம்பர், 2017

தோஷம், பாவங்கள் தீர்க்கும், நன்மைகள் அருளும் ஐப்பசி அன்னாபிஷேகம்! #AnnaAbishekam

அனைத்து ஜீவராசிகளையும் படைத்த இறைவன், அந்த ஜீவன்கள் உண்டு உயிர் வாழ இரை என்னும் உணவையும் படைத்தான். ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே, தனக்கு இறைவன் அருளிய உணவை, இறைவனுக்கு நிவேதனம் செய்த பிறகே, பிரசாதமாக உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டார்கள். ஆக, இறையோடு நெருங்கியத் தொடர்பு கொண்டது இரை. ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்களும் தங்கள் பகுதியில் தங்களுக்குக் கிடைக்கும் உணவுப் பொருள்களை இறைவனுக்கு நிவேதனம் செய்கின்றனர். இந்த உணவுதான் அன்னம் எனப்படுகிறது. அதனால்தான், அன்னம் இறைவனின் அம்சமாக விளங்குவதாக வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. 'உண்ணும் உணவும், பருகும் நீரும், சுவைக்கும் வெற்றிலையும் இறைவனே' என்று அனுபவித்துப் பாடியிருப்பது அதனால்தான். அப்படி தென்னிந்தியாவில் வசிக்கும் பலருக்கும் அன்னம்தான் உணவாக இருக்கிறது. இந்த அன்னத்தின் பெருமையை இறைவனோடு தொடர்பு வைத்துக்கொண்டாடப்படும் திருநாளே ஐப்பசி அன்னாபிஷேகம்.


ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். இது குறித்து மேலும் தகவல் அறிந்துகொள்ள புதுச்சேரி முத்து குருக்களிடம் கேட்டோம்.
"ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது. இந்தத் திருநாளில் ஈசனைத் தரிசிக்கும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். அன்னாபிஷேக வடிவில் சிவசக்தி வடிவமாக இருக்கும் இறைவனை இந்நாளில் வணங்கினால் குடும்ப ஒற்றுமை மேம்படும். அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியில் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். அதாவது ஐப்பசி மாதம் துலாம் ராசியில் இருக்கும் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், அதுபோலவே மேஷத்தில் இருக்கும் சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பார்கள். இதனால் இந்த நாள் விசேஷமான சிவசக்தி தினமாக போற்றப்படுகிறது.


அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.
இதைவிடவும் முக்கியமான ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அக்காலங்களில் ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்து, ஊரே வெள்ளக்காடாக இருக்கும்போது, ஊர்மக்கள் எல்லோருக்கும் அடைக்கலமாகத் திகழ்ந்தது ஆலயங்கள்தான். ஊர்மக்கள் அனைவருக்கும் தேவையான உணவைச் சமைத்து, சமைத்த உணவை இறைவனுக்கு அபிஷேகமும் நிவேதனமும் செய்து, ஊர்மக்கள் பசியாறப் பரிமாறுவார்கள். அன்று ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெற்ற இந்த வழிபாடு, தற்போது பௌர்ணமி தினங்களில் மட்டும் நடைபெறுகிறது. எனவே, இந்த விழா வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் விளங்குகிறது
ஐப்பசி பௌர்ணமி தினத்தில், நிலத்தில் அறுவடையான புது நெல்லைக் குத்தி, புடைத்து, அதை அவித்து வடித்து அன்னம் சமைப்பார்கள். இந்த அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னத்தாலும், காய்கனிகளாலும் அலங்காரம் செய்வார்கள். பின்னர், அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இந்த அன்னத்தைப் புசிப்பவர்கள் சகலவித பாக்கியங்களையும் பெறுவார்கள். ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சகலவித திரவியங்களாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே அன்னத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது வெற்றிலை, வேக வைத்த காய்கறிகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். வெற்றிலை கொண்டு அலங்கரிப்பதால் அதைக் காண்பவர்களின் வீட்டில் சகல மங்கல நிகழ்வுகளும் நல்லபடி நடைபெறும் என்பது ஐதீகம். அதுபோல வாழைக்காய் பித்ரு தோஷங்களைத் தீர்க்கும். புடலங்காய் சர்ப்பதோஷத்தை நீக்கும். இப்படி ஒவ்வொரு காய் கனியும் ஒவ்வொரு பலன்களைத் தரும். வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் அலங்காரத்தால் சந்தான பிராப்தி கிட்டும் என்பதும் நம்பிக்கை.
பக்தர்கள் உண்டது போக, மீதமிருக்கும் அன்னம் அந்த ஊரில் இருக்கும் குளம், ஏரிகளில் கரைத்து விடப்படும். அந்த அன்னம் மீன்களுக்கு உணவாவது மட்டுமன்றி நீரினால் உண்டாகும் நோய்களை நீக்கி விடும் என்பதும் நம்பிக்கை. மீன்கள் பெருகினால் அந்த நீரின் மாசுக்கள் நீங்கி விடும் என்பது அறிவியலும் கூடத்தான். இப்படி மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், ஜோதிடம் என எல்லாச் சிறப்புகளையும் கொண்டது இந்த அன்னாபிஷேகத் திருவிழா. இந்த நாளில் ஈசனை வழிபாட்டு அன்னத்தினை பிரசாதமாக உட்கொண்டு நலம் பெற வேண்டுகிறோம்' என்றார்.



உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக