Like us on Facebook

வியாழன், 2 நவம்பர், 2017

வாரத்துககு மூன்று முட்டை!

நன்றி குங்குமம் டாக்டர்

‘‘நம் அன்றாட உணவில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துமிக்க ஓர் உணவுப்பொருள்தான் முட்டை. நமது ஒரு நாள் தேவையில் 6 சதவீதம் வைட்டமின் ஏ, 5 சதவீதம் ஃபோலேட், வைட்டமின் B5 - 7 சதவீதம், வைட்டமின் B12 - 9 சதவீதம், வைட்டமின் B2 - 15 சதவீதம், பாஸ்பரஸ் 9 சதவீதம் மற்றும் செலினியம் 22 சதவீதம் ஆகியவற்றைத் தருகிறது’’ என்று முட்டையின் பெருமைகளை அடுக்குகிறார் உணவியல் நிபுணர் வித்யா பாலகிருஷ்ணன்.
‘‘முட்டை ஒரு முழுமையான உணவு. ஏனெனில், முட்டையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் A, D, E, K, B12, ஃபோலேட், Lutein மற்றும் Zeaxanthin போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் உள்ளது. அதனால், மஞ்சள் கருவைத் தவிர்ப்பது முட்டையின் சத்துக்களை இழப்பதே ஆகும். மேலும், இதில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத Cholin என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது முட்டையின் தனித்தன்மையாகும். முட்டையில் நமக்கு தேவையான முக்கியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதத்தில் உள்ளது.
Cholin மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு Zeaxanthin antioxidant கண் நோய்கள் வராமலும் தடுக்கிறது. முட்டையில் செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண் ஊட்டச்சத்துக்களும் உள்ளது. முட்டை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது
புரதம்தான். அதற்குக் காரணம் அமினோ அமிலங்களின் சரியான விகிதாச்சாரம் முட்டையில் அமைந்ததாகும். முட்டை மருத்துவ ரீதியில் அல்புமினுக்கு பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவினை சாப்பிடலாம்.
முக்கியமாக, செயற்கை சிறுநீர் சுத்திகரிப்பு(Dialysis) மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. முட்டையின் வெள்ளைக்கரு அல்புமின் நிறைந்துள்ளதால் அவர்கள் தாராளமாக வேகவைத்து வெள்ளைக்கருவை மட்டும்
சாப்பிடலாம். ஒரு முட்டையில் 212 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒரு நாளின் தேவைக்கு போதுமானதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல; முட்டையின் மஞ்சள் கருவில்தான் கொலஸ்ட்ரால் அதிகம். அதனால் முட்டை சாப்பிடும்போது மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதைத் தவிர்க்கக் கூடாது.
வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டையை வேகவைத்து சாப்பிடுவது அவர்கள் வளர்ச்சியை சீராக்கும். முட்டை மஞ்சள் கருவை பிறந்த 6- 7 மாதம் ஆன குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி கொடுக்கலாம். குழந்தை அதை ஏற்றுக்கொண்டால், பின்னர் சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். ஏதும் ஒவ்வாமை ஏற்பட்டால் 10 மாதங்களுக்குப் பிறகு கொடுக்க ஆரம்பிக்கலாம். அதன் பிறகு, முழு முட்டையை மிருதுவாக வேகவைத்துக் கொடுக்கலாம். கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக வாரத்துக்கு 3 முட்டைகளாவது ஒருவர் சாப்பிடுவது நல்லது.
கொலஸ்ட்ரால் இருப்பதால் இதயநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எழலாம். பல ஆராய்ச்சிகள் இதற்கு சொல்லும் பதில் ‘சாப்பிடலாம்’ என்பதுதான். பலரும் நினைப்பது போல, முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் இதய நோய்கள் வராது என்றும் ரத்தத்தில் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள் மட்டும் குறைவாக சாப்பிட வேண்டும் என்றுதான் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. முட்டையை பச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். ஏனெனில், வெ்ள்ளைக்கருவில் உள்ள அவிடின் நமது உடலில் உள்ள பயோட்டின் உடன் சேர்ந்து அதை உடலுக்குக் கிடைக்கவிடாமல் செய்துவிடும்.
அதுவே, வேகவைத்துவிட்டால் அபிடின் பயோட்டினுடன் சேராது. மேலும் முட்டை நுண்கிருமிகள் வளர்வதற்கான ஓர் எளிதான ஊடகமாகவும் இருப்பதால், முட்டையை வேகவைக்காமல் சாப்பிடுவதால் நுண்கிருமிகள் உடல் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். மிக முக்கியமாக சால்மோனெல்லா டைஃபி டைபாய்டு காய்ச்சலை உருவாக்கும். எனவே, முட்டையை சரியான பதத்தில் வேகவைத்தே சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவை அதிகம் வேகவைப்பதால் அதில் இருக்கும் சத்துக்கள் ஆக்ஸிடேஷன் ஆகிவிடும்.
அதிக நேரமோ, அரை வேக்காட்டிலோ வேகவைக்ககூடாது. முட்டையை பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதாலும் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதும் தவறு. முட்டையின் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கிறது. முட்டை சாப்பிடுவதால் வாயுக்கோளாறு, ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டால் அவர்கள் உடனே மருத்துவரை அணுகி, அலர்ஜிக்கான காரணத்தை அறிந்து முட்டையை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக முடிந்தவரை நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவதே சிறந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக