வியாசர்!!!
பல கோடி மந்திரங்களில் மக்கள் படிக்கும் விதமாக வேதங்களை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீ வியாச பகவான். வியாச பூர்ணிமாவில் இப்பெருமானை வணங்கி நலம் பெறுவோம். நம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன். இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும் மேலாகப் புகழ் பெற்றவர். வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல். இதற்கு, ‘வேதங்களைப் பிரிப்பவர்’ என்று பொருள். வேதங்களை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என, பிரித்தவர் வியாசர். ‘வியாசம்’ என்றால், கட்டுரை என்றும் பொருளுண்டு. கட்டுரையில் பத்தி பிரித்து எழுதுவது போல, வேதங்களைப் இவர் பிரித்தார். இவரது நிஜப்பெயர் கிருஷ்ண துவைபாயனர். ‘கிருஷ்ண’ என்றால், கருப்பு. இதனால் தான், பவுர்ணமிக்கு பின், அமாவாசை வரை வரும் பதினைந்து தேய்பிறை நாட்களை, கிருஷ்ண பட்சம் என்கின்றனர். அதாவது, இருட்டை நோக்கி செல்லும் காலம். ‘த்வைபாயனர்’ என்றால், தீவில் பிறந்தவர் என்று பொருள். வியாசர் நாற்புறமும் தண்ணீர் சூழ்ந்த ஒரு தீவில் பிறந்தவர். இவரது தாய் சத்தியவதி. சேதிநாட்டு அரசனான உபரிசரவசுவின் மகள். இவள் ஒரு மீனின் வயிற்றில் பிறந்ததால், உச்சைச்ரவஸ் என்ற மீனவ தலைவர் வீட்டில் வளர்ந்தாள். இவள் யமுனை நதியில், படகு ஓட்டி பிழைப்பை நடத்தி வந்த சமயத்தில், ஒரு நாள், பராசர முனிவர் அங்கு வந்தார். அந்த நேரம் மிக நல்ல நேரமாக இருந்ததால், பராசரார், ‘பெண்ணே… இந்த சமயத்தில் நாம் இணைந்தால், உலகம் போற்றும் ஒரு உத்தமக் குழந்தையைப் பெறலாம்…’ என்றார். சத்தியவதி மறுத்தாள். பின், அவளைச் சமாதானம் செய்து, அவளுடன் இணைந்தார். அவ்வாறு பிறந்த பிள்ளையே வியாசர். இதனால் தான், நதிமூலம், ரிஷிமூலம் பார்க்காதே என்பர். வழி தவறாக இருந்தாலும், நல்லது நடக்க, சில சமயங்களில், நிர்பந்தங்களை ஏற்க வேண்டி வருகிறது. வியாசர் பிறக்காவிட்டால், மகாபாரதம் கிடைத்திருக்காது. இன்று கூட குழந்தை இல்லாதவர்கள், வேறு ஒருவரின் அணுவை ஏற்று, சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது, தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டுமே என்பதற்காகத் தான்.இதை, இன்று உலகம் அங்கீகரித்து விட்டது. இதுபோல் தான், அன்றும் நடந்துள்ளது. விஷ்ணுவே, வியாசராக பிறந்தார் என்றும் சொல்வதுண்டு. இவர் வேதங்களைப் பிரித்தவர் என்பதால், வேதம் ஓதுவோர் இவரை, குருவாக ஏற்றுள்ளனர். மடாதிபதிகள் இவரது பூஜை நாளில், சாதுர்மாஸ்ய விரதம் (நான்கு மாத தவம்) துவங்குவர். பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான்; பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான் என்பது போன்ற அற்புதக் கருத்துகளை உதிர்த்தவர் வியாசர். அவர் எழுதிய மகாபாரதத்தை படிப்போம். அதிலுள்ள சிறந்த தர்மநெறிகளைக் கடைபிடித்து வாழ்வோம். கிழக்கும் மேற்கும் என்றென்றும் வணங்கித் துதித்துப் போற்றும் ஒப்பற்ற பெருந்தகை வியாசர். உலகின் மாபெரும் பழைய ஞானிகளின் மேற்கோள்களை சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், கன்பியூஷியஸ், லாவோட்சு என்ற பெயர்களுடன் பார்த்திருக்கிறோம். வியாசர் என்று பெயர் போட்டு நாம் எதையும் எடுத்துக் காட்டுவதில்லை. நமது தொல் ஞானம் முழுவதுமே ஒரு வகையில் வியாசரின் கொடை என்று கருதுகிறோம். வ்யாஸோச்சிஷ்டம் ஜகத் ஸர்வம் – இவ்வுலக அறிவு அனைத்தும் வியாசனின் எச்சில். நமது சமய பாரம்பரியம் கீழ்க்காணும் மகரிஷிகள் அனைவரையும் ஒன்று போல வியாசர் என்றே அடையாளப் படுத்துகிறது. வேதங்களை ரிக்,யஜுர்,சாம,அதர்வண என்று நான்காகப் பகுத்த வேத வியாசர். மகாபாரதம் அளித்த கவி-ரிஷி கிருஷ்ண த்வைபாயனர். பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உப புராணங்களையும் இயற்றியவராகக் கருதப் படும் காவிய கர்த்தாவான வியாசர். வேதாந்த தரிசனத்தின் மூல நூல்களில் ஒன்றான பிரம்ம சூத்திரம் இயற்றிய பாதராயண வியாசர். புராணக் கதைகளில் கால முரண்களும், பின் நவீனத்துவ உத்திகளும், எல்லாம் சாத்தியம். கதைத் தொடர்ச்சியும், காவியங்களுக்கு உட்பட்ட தர்க்கபூர்வமான ஒருமையும் வேண்டும் பொருட்டு வியாசர், பரசுராமர் போன்ற சிரஞ்சீவி கதை மாந்தர்களைக் குறித்து பற்பல புராணங்களில் பல்வேறு முரண்பாடு கொண்ட கதைகள் புனையப் பட்டுள்ளன. சென்னை நகரில் உள்ள வியாசர்பாடி என்ற ஊரில் வியாசர் வசித்தது போன்ற ஸ்தல புராணங்கள் கூட நம்மிடம் உண்டு! புராண அழகியலின் ஒரு பகுதியாகவே அவற்றைக் கருத வேண்டும். ஆனால் வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இந்த நால்வரும் ஒருவராக இருப்பது என்பது முற்றிலுமாக சாத்தியமில்லாதது. எனவே, பல கபிலர்கள், அகஸ்தியர்கள் போல வியாசர்களும் பல்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கக் கூடும்; வியாசர் என்பது ஒரு சிறப்பு அடைமொழி என்பது ஏற்புடைய ஒரு பொதுக் கருத்தாக உள்ளது. மேற்கண்ட பட்டியலில் மூன்றாவது, நான்காவதாக உள்ள வியாசர்களை முதலில் எடுத்துக் கொள்வோம். புராணங்களில் உள்ள பல தொன்மங்கள் மிகப் பழமையானவை. ஆனால் புராண நூல்கள் இதிகாச காலத்திற்குப் பிற்பட்டவை. பொ.மு 2ம் நூற்றாண்டு முதல் பொதுயுகம் 6ம் நூற்றாண்டு வரை அவை பரிணமித்து வந்துள்ளன. ஸ்ரீமத் பாகவதம் போன்ற புராணங்களின் சில பகுதிகள் 9-10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்றும் கருதப் படுகின்றன. எனவே, சைவ, வைணவ, சாக்த சமயப் பிரிவுகளை வளர்த்தெடுத்த மகரிஷிகளே இவற்றை இயற்றிய “வியாசர்கள்” ஆக இருக்கக் கூடும். தத்துவ விவாத நடையில் உள்ள பிரம்ம சூத்திரம், சாங்கியம், யோகம் முதலான ஆறு தரிசனங்கள் தனித்த பிரிவுகளாக நிலைபெற்று விட்ட காலத்தைச் சேர்ந்தது. புத்தருக்குப் பிற்பட்டது என்ற கருத்தும் உள்ளது. ஆனால், இதை எழுதிய வேதாந்த ஞானியாகிய பாதராயணரையும் வியாசர் என்றே மரபு அடையாளப் படுத்தி விட்டிருக்கிறது. இந்த இருவரையும் தவிர்த்தால், முதல் இரண்டு வியாசர்கள் எஞ்சுகின்றனர். இதில் இரண்டாவதாக உள்ள கிருஷ்ண துவைபாயன வியாசர் என்பவர் முழுமையான ஒரு தனித்த வரலாற்று ஆளுமை என்பது மகாபாரதத்தை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்கும் கிடைக்கும் சித்திரம். வேதகால கருத்தாக்கங்களின் மிக இயல்பான நீட்சியாகவே மகாபாரதம் உள்ளது. “பாரதம் ஐந்தாவது வேதம்” என்ற வழக்கும் அது பற்றியே. எனவே வேதங்களை நான்காகப் பகுத்து, தனது நான்கு சீடர்களுக்கு வழங்கிய வேத வியாசரும் இவரும் ஒருவரே என்று கருத இடமிருக்கிறது. கலைந்தும், சிதறியும் கிடக்கும் மூத்தோர் சொற்களை நினைவிலிருந்து எடுத்து நெறிப்படுத்தி பகுத்து வைத்து பாகுபாப்பது ஒரு முக்கியமான அறிவுச் செயல்பாடாகவே பழங்காலத்தில் கருதப் பட்டிருக்கும். வியாச என்ற சொல்லுக்கு பகுத்தல், அமைத்தல், சீராக்குதல் என்ற அர்த்தங்கள் உண்டு. கிருஷ்ண துவைபாயன வியாசர் பாடியது 8800 சுலோகங்களே கொண்ட மகாபாரதத்தின் முதல் வடிவமான “ஜெயம்” எனும் காவியம். அரசவம்ச கதைகளையும், வீரகதைகளையும் பாடும் சூதர்களிடமிருந்து கேட்ட கதைகளே இக்காவியத்தின் விதைகள் எனலாம். மகாபாரதத்தின் காவிய கட்டமைப்பை நோக்கும் போது, இதன் முதல் வடிவத்திலேயே ஒவ்வொரு பகுதியையும் விரிவு படுத்துவதற்கான சட்டகத்தையும் அவர் அளித்திருக்கிறார் என்று கருத இடம் உள்ளது. பின்னர் அவரது சீடர்களான வைசம்பாயனர், லோமஹர்ஷணர், லோமஹர்ஷணரின் மைந்தரான உக்ரஸ்வரஸ் ஆகியோரும், அவரது புதல்வரான சுகரும் பாரதக் கதையை விரிவாக்கி மீள் உரைத்தனர். இப்படித் தான் மகாபாரதம் படிப்படியாக ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட மாபெரும் நூலாக உருவெடுத்தது. இதற்கான அகச்சான்றுகள் மகாபாரதத்திற்கு உள்ளேயே உள்ளன. மற்றொரு சீடரான ஜைமினி வழியாக வந்த பாரதம் பெரும்பாலும் வழக்கில் இல்லை. வியாசர் கூறுவதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதுவதாக உள்ள தொன்மம், வாய்மொழி மரபாகவே இருந்த மானுட அறிவு, முதன் முதலில் எழுத்து வடிவம் கொள்வதைக் குறிக்கிறது. வசிஷ்ட மரபில் வந்த பராசர முனிவருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ண துவைபாயனர். கிருஷ்ண என்றால் கருப்பு நிறமுடையவர். துவைபாயனர் என்றால் “தீவில் வளர்ந்தவர்” அல்லது தீவின் வழி வந்தவர் என்று பொருள். யமுனை நதியிலுள்ள ஒரு தீவில் பிறந்து வளர்ந்தவர், அல்லது நாவலந்தீவு (ஜம்பு த்வீபம்) என்று அழைக்கப் பட்ட அன்றைய பாரதவர்ஷம் முழுவதும் பயணம் செய்து வந்தவர் என்ற பொருளில் இப்பெயர் வந்திருக்கலாம். சத்யவதி பின்னர் குரு வம்சத்தில், பரத மன்னரின் மரபில் வந்த சாந்தனுவைத் திருமணம் செய்து கொண்டதால், வியாசரின் வாழ்க்கை குரு வம்சத்துடன் தொடர்பு கொண்டதாகிறது. வியாசருடன் நியோக முறை மூலம் இணைந்து குரு வம்சத்து ராணிகள் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரைப் பெறுகிறார்கள். எனவே, பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருக்கும் மூதாதையாக இருப்பவர் வியாசர் என்றாகிறது. இந்த அம்சம் வியாசரை இந்த வரலாற்றின் இணைபிரியாத ஒரு பகுதியாக ஆக்குகிறது. இந்த வரலாறு இதிகாசமாக விரியும் போது, அதன் கதையை இயக்கும் சூத்திரதாரியாகவும், எந்த சார்புமின்றி சாட்சியாக நின்று நடந்ததைப் பதிவு செய்பவராகவும் ஆக்குகிறது. Meta fiction போன்ற நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக உள்ளது பாரதத்தின் காவியச் செழுமை. பாரதத்தில் வியாசர் தோன்றும் இடங்களை ஆராய்ந்து பார்த்தால், அதன் நோக்கம் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாகவோ, அல்லது அந்தத் தருணத்தில் ஏற்பட்ட ஒரு அறச் சிக்கலுக்கு விடையளிப்பதாகவோ இருக்கும். திரௌபதி சுயம்வரத்திற்குப் பிறகு அவள் ஐவருக்கு மனைவி ஆவது தர்மமா என்று குழம்பி நிற்கும் இடத்தில் வியாசர் வந்து விளக்கம் அளிக்கிறார். ராஜசூய யாகத்தின் முடிவில் சிசுபால வதம் நிகழ்கிறது. அது ஒரு அபசகுனமோ என்று கவலை கொண்டிருக்கும் தருமனுக்கு வியாசர் அறிவுரை வழங்குகிறார். யுத்தம் உறுதி என்று இரு தரப்பும் முடிவு செய்த பிறகு திருதராஷ்டிரனிடம் வந்து வியாசர் பேசுகிறார். யுத்தக் காட்சிகளைக் கண்டு உரைக்கக் கூடிய ஞான திருஷ்டியை சஞ்சயனுக்கு வழங்குகிறார். போர்க்களத்திற்கும் வியாசர் வருகிறார். அபிமன்யு மரணத்திற்குப் பின் கலங்கி நிற்கும் பாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். போரின் இறுதிக் கட்டத்தில் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் உலகை அழிக்கும் அஸ்திரங்களை ஏவ, இருவரையும் அமைதிப் படுத்தி அவற்றைத் திரும்பப் பெற அறிவுறுத்துகிறார். இப்படி வியாசர் வரும் இடங்கள் எல்லாம் உண்மையில் வியாசரின் பௌதீக வருகை அல்ல. மாறாக “கதாசிரியன் கதையில் தோன்றும் இடங்கள்” போன்ற ஒரு இலக்கிய உத்தியாகவும் இருக்கலாம். வியாசர் அருளிய ஞானத்தின் மணிமுடி கீதை. கிருஷ்ண துவைபாயனனும் கிருஷ்ண வாசுதேவனும் இரு தனித்த தெய்வீக அவதாரங்களானாலும், சிந்தனை அளவில் ஒருவரே தான். ஒரே தத்துவ ஞான விருட்சத்தின் இரு கிளைகள். தர்மத்தையும், மானுட வாழ்க்கையையும் குறித்த அவர்களது பார்வைகள் ஒன்றே. ஒருவர் மகரிஷியாக எதிலும் பற்றற்று, அதே சமயம் உலக நலனுக்காக தர்மத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறார். மற்றொருவரும், எப்போதும் பற்றற்ற யோக சமநிலையுடன் இருந்து கொண்டு, நடைமுறையில் யாதவ மன்னனாக, பாண்டவர்களின் துணைவனாக, அதர்மத்தை அழிக்க போர்க்களத்தில் இறங்குகிறார். இந்த மண்ணின் அழியாத தெய்வீக ஞானம் இவர்கள் இருவரது சிந்தனையும் மொழியும் ஒன்று கூடும் மகத்தான தருணத்தில், பகவத்கீதையாக வெளிப் படுகிறது. மனித அகத்தின் உன்னதங்களையும் கீழ்மைகளையும், போரின் வீரத்தையும், கோரத்தையும் அழிவையும் சம நிலையில் நின்று பிரமிப்பூட்டும் வகையில் பேசிச் செல்கிறது வியாசனின் கவிதை. உலகின் எல்லாப் பேரிலக்கியங்களையும் போல இறுதியில் எஞ்சுவது எது என்ற “அபத்த” தரிசனத்தையும் அது அளிக்கிறது தான். ஆனால் அதனோடு மட்டும் நின்று விடுவதில்லை. மகாபாரதத்தின் ஒவ்வொரு சொல்லும் தர்மம் என்ற எல்லையற்ற கருத்தாக்கத்தினை மானுட மனத்திற்கு அருகில் கொண்டு வரும் ஒரு சிறு அடிவைப்பு போல இருக்கிறது. “கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகிறேன். ஆனால் கேட்பார் ஒருவருமில்லை. அறத்திலிருந்து தான் பொருளும், இன்பமும் எல்லாம். ஆனால் அதை ஏன் மனிதர் பின்பற்றுவதில்லை? காமத்தாலோ பயத்தாலோ பொறாமையாலோ உயிர் போகும் என்ற நிலையிலோ கூட தர்மத்தை விட்டு விடாதீர்! தர்மம் என்றும் உள்ளது. இன்ப துன்பங்கள் அநித்தியமானவை.. “ (ஸ்வர்க்க ஆரோஹணிக பர்வம், 5.62-63) மானுட அறம் என்பதையே தனது சாரமான இறுதிச் செய்தியாக வியாசர் விட்டுச் செல்கிறார். வியாசரின் மகோன்னதமான அறிவுச் சுடரின் ஒளி விண் நோக்கி எழுகிறது. வானம் அளாவுகிறது. ஆனால் அவரது விழிகளின் கருணை எப்போதும் மண்மீதும், மானுடம் மீதும் ஆழப் பதிந்திருக்கிறது. உணவூட்டி, உயிர்காக்கும் கங்கையும் யமுனையும் பிறக்குமிடம் இமயம். மண்மீது நிற்கும் அம் மாமலையின் முகடுகள் என்றென்றைக்குமாக வான் நோக்கி உயர்வது போல.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக