செவ்வாய், 28 ஜூலை, 2015
Home »
» மக்கள் ஜனாதிபதி
மக்கள் ஜனாதிபதி
இந்தியர்களால், 'மக்கள் ஜனாதிபதி' என, அன்புடன் அழைக்கப்பட்டவரும், இளைய தலைமுறையினரிடையே, 'கனவு காணுங்கள்' என்ற தன்னம்பிக்கையை விதைத்து, அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிகாட்டியவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று இரவு, மாரடைப்பால் காலமானார். முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், 84, வடகிழக்கு மாநிலமான, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனமான, ஐ.ஐ.எம்.,மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். நேற்று மாலை துவங்கிய கருத்தரங்கில், மாணவர்களிடையே, கலாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மாலை, 6:30 மணிக்கு திடீரென, அவருக்கு வியர்த்து கொட்டியது; சோர்வடைந்த அவர், மேடையிலேயே மயங்கி விழுந்தார். பதறிய அதிகாரிகள், உடனடியாக அவரை, பெதானி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலர், வார்ஜிரி ஆகியோர், மருத்துவமனைக்கு விரைந்தனர்; ராணுவ டாக்டர்களும் மருத்துவமனைக்கு விரைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி, அப்துல் கலாம் காலமானார். தலைமைச் செயலர் வார்ஜிரி கூறுகையில், ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மாரடைப்பால் காலமானார். அவரின் உடல், நாளை (இன்று) காலை, டில்லிக்கு எடுத்துச் செல்லப்படும்,'' என்றார். கலாமின் மறைவை அடுத்து, 'ஏழு நாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ஏவுகணை நாயகன்! நாட்டின், 11வது ஜனாதிபதியான அப்துல் கலாம், 2002 - 2007 வரை, அந்த பதவியை வகித்தார். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில், 1931ம் ஆண்டு, அக்டோபர், 15ல் பிறந்த அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம், பாரத் ரத்னா, பத்ம பூஷன் போன்ற விருதுகளை பெற்று, அந்த விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர். அணு சக்தி துறையுடன் இணைந்து, 'பொக்ரான்' அணுகுண்டு சோதனை நடத்தியதில், அப்துல் கலாமுக்கு முக்கிய பங்கு உண்டு. 'அக்னி, பிரித்வி' போன்ற ஏவுகணைகளின் தயாரிப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்து, 'இந்தியாவின் ஏவுகணை நாயகன்' என்றும் பெருமையுடன் அழைக்கப்பட்டார். நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவகவுடா போன்றோர் பிரதமர்களாக இருந்தபோது, அவர்களின் அறிவியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக, மாணவர்களிடையே, 'கனவு காணுங்கள்; அது, உங்கள் உயர்வுக்கு வழி காட்டும்' என்ற தன்னம்பிக்கை விதையை ஆழமாக விதைத்த அப்துல் கலாம், செல்லும் இடமெல்லாம் மாணவர்களைசந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடத்தவறியது இல்லை. தான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கு வரும், வி.வி.ஐ.பி.,க்களை விட, மாணவர்கள், குழந்தைகளை நோக்கித் தான், அப்துல் கலாமின் பார்வை இருக்கும். அந்த அளவுக்கு, இளைய தலைமுறையினரை பெரிதும் நேசித்தார். ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன் ஆகியோரை தொடர்ந்து, ஜனாதிபதியாக பதவி வகித்த மூன்றாவது தமிழர் என்ற பெருமையும் கலாமுக்கு உண்டு. இவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையை கலகலப்பாக மாற்றி, அதில் உள்ள, 'முகல்' தோட்டத்தை விசேஷமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்தார்.சாதாரண மக்கள், எளிதில் அணுக முடியாத இரும்பு கோட்டையாக இருந்த ஜனாதிபதி மாளிகையை, ஏழை, எளிய மக்களின் தரிசனத்துக்காக திறந்து விட்ட பெருமைக்குரிய இதயம் படைத்தவர். திருக்குறள் மீது பற்று: நாட்டின் எந்த மூலையில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தாலும், கலாம் எழுதிய, 'அக்னி சிறகுகள்' என்ற புத்தகம் தான், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்றுமே பரிசாக அளிக்கப்படுகிறது. அணுசக்தி விஞ்ஞானியாக இருந்தாலும், தாய் மொழியான தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அதீத பற்று உடையவராக இருந்தார். தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், திருக்குறளை மேற்கோள் காட்டி பேச, அவர் தவறியது இல்லை. தன், பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், அனைவரது மனதையும் வசியம் செய்தவர். பிரம்மாண்டமான ஜனாதிபதி மாளிகையில், தன் குடும்பத்தினரை சேர்க்காமல், எளிமையை பின்பற்றினார். எளிமையும், ஆடம்பரமின்மையுமே அப்துல் கலாமின் மற்றொரு அடையாளம்! 'இவர் போன்ற ஒரு தலைவர் நமக்கு கிடைக்க மாட்டாரா...'என, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஏங்க வைத்தவர். இதுவரை, 13 பேர், இந்திய ஜனாதிபதி நாற்காலியை அலங்கரித்திருந்தாலும், 'மக்கள் ஜனாதிபதி' என, அனைத்து தரப்பினராலும், ஏகோபித்த பாராட்டை பெற்றவர். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 84 வயதிலும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். 'இந்தியா, 2020க்குள் வல்லரசாக வேண்டும்' என, அடிக்கடி கூறி வந்த கலாம், கடைசிவரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தார். கண்ணீர் கடல்: எப்போதும், மாணவர்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த கலாம், தன் கடைசி வினாடியையும் மாணவர்கள் மத்தியில், அவர்களுக்காகவே செலவிட்டு, தன் மூச்சுக்காற்றை, இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஊடுருவி, விண்ணில் கலந்து விட்டார்.ஜவகர்லால் நேருவுக்கு பின், காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமரி வரையுள்ள நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அழுத்தமாக இடம்பிடித்து, அவர்களின் பேரன்பை பெற்ற, 'அணு நாயகன்' என்ற மகத்தான மாமனிதரின் மரணம், நாட்டு மக்களை, கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. சோகத்தில் சொந்த ஊர்: கலாம் மறைவால், ராமேஸ்வரம் சோகத்தில் மூழ்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள, அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாப்தீன், பேரன் சலீம் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த உள்ளூர் மக்கள், கூட்டம் கூட்டமாக, கலாம் வீட்டின் முன் குவிந்து, கண்ணீர் வடித்தனர். முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், தமிழ்த்தாய் அறக்கட்டளை நிர்வாகிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலாம் பேரன் சலீமிற்கு ஆறுதல் கூறி, இரங்கலை தெரிவித்தனர். 'ராமேஸ்வரத்தில் அடக்கம்': அப்துல் கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் பேரன் சலீம் கூறுகையில், ''நேற்று மாலை, 4:00 மணிக்குதான், தாத்தாவுடன் பேசினேன். ஷில்லாங்கில் குளிராக இருந்ததால், சுவாச பிரச்னை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான், அனைத்து மதத்தினரின் விருப்பம். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக